ஸ்ரீ ஸ்வயம் ப்ரகாச ஞானோபதேச கவசம்

ஸ்ரீ ஸ்வயம் ப்ரகாச ஞானோபதேச கவசம்

Swayam prakasa swamigal
swayam prakAsa swAmigal

ஸ்ரீ மஹா குருப்யோ நம:
ஸ்ரீ மஹா கணபதயே நம:

கோடானுகோடி சூர்ய ஸ்வயம்ப்ரகாச கணபதியே
முக்கண் பரஞ்சுடரே முழுமுதற் கடவுளானவனே
எங்கும் நிறைந்தவனே எல்லாமும் ஆனவனே
என்னை நான் உணர்வதர்க்கோர் கவசமதைத் தந்திடுவீர் 1

ஆனைமுகன் தம்பியே ஞானபண்டித பரசிவமே
நாராயணன் நான்முகத்தோன் முக்கண்ணன் சக்தியே
அழிவற்ற தெய்வங்கள் தேவமுனிவர்களை ஏத்தி
கலிதோஷம் அகற்றிவைக்கும் உபதேசம் வேண்டுகிறேன் 2

ஸச்சிதானந்த மயமான ஸ்ரீதத்த குரோ சரணம் சரணம்
சுத்த சிதாகாயமான பரமேஷ்டி குரோ சரணம் சரணம்
வானமென அகண்ட பரம குரோ சரணம் சரணம்
அகண்ட பரப்ரம்மமய அவதூத ஸத்குரோ சரணம் சரணம் 3

ஸர்வாத்ம ஸ்வருப ஸ்வயம்ப்ரகாச குரோ போற்றி போற்றி
அருள் வடிவே ஆனந்த அவதூத குரோ போற்றி போற்றி
ஸர்வஞ்ஞ ஸத்குருவே சரணடைந்தேன் போற்றி போற்றி
இஹபர தாபம் நீக்கி என்னை ஆட்கொண்ட குரோ போற்றி 4

நிகரற்ற நிர்மல ஞானமதனை நீயெனக்குத் தந்திடுவாய்
துன்பமெலாம் தீர்க்கின்ற தூய ஞானமதனைத் தந்திடுவாய்
அஞ்ஞானம் அணுவுமிலா அகண்ட ஞானமதனைத் தந்திடுவாய்
அனைத்தும் ஸ்வயம்ப்ரகாசமெனும் அநுபூதியைத் தந்திடுவாய் 5

பரிபூரணமாம் ஸத்குருவே துன்பமதைத் துடைதிட்டு
இன்பமிது பரஞானமதை இமைக்குமுன் தந்தருளி
தோன்றுகின்ற துவிதமெலாம் துடைத்துக் காத்திட்டருளி
அத்வைத ஞானமதை அடிமைக்கு உபதேசித்தாய் 6

உள்ளொழுக்கம் போயொழிந்து நல்லொழுக்கம் உண்டாகிடவே
பரம்பொருளான குரோ பற்றிவிட்டேன் சிக்கெனவே
ஐம்புலனை அடக்கி அறியாமை இருளகற்றி
ஒர்குலம் ஓருயிர் மெய்ப்பொருளை உணர்த்திடுவாய் 7

பேராசை வஞ்சனை பொறாமை குணமகற்றி
காமக்ரோதமெலாம் சுட்டெரித்து இவனையும் நீ
கடல்போன்ற கருணையுள்ள ஸத்குரோ காத்திட்டு
மனதை மௌனமாக்கி மனஅமைதியைத் தந்திடுவீர் 8

பிறப்பையும் இறப்பையும் பிறவிப்பிணி என்றுணர்த்தி
மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டி
பேரின்ப முக்திதனை பெற்றுய்ய வழிகாட்டி
அவதூத ஸத்குரோ அனுக்ரஹம் செய்திடுவீர் 9

ஜாதிகுல கோத்திரதிற்கப்பாலன குரோ
ஐந்துகோசத்திற்கும் அப்பாலான குரோ
மூலப்ரக்ருதிக்கப்பாலான முழுமுதற்கடவுளான குரோ
நாமரூபம் எவையுமற்ற ஸத்குருநாதா கேட்டிடுவீர் 10

என்றும் உள்ள இயற்கையான ஆதிகுருநாதா
ஒங்காரதுட்பொருளான மெய்ப்பொருளே ஸத்குருநாதா
இடம் காலம் பொருள் கடந்த ப்ரம்ம மயமான குரோ
இரட்சித்து ஆட்கொள்வாய் இக்கணமே இவனையும் நீ 11

ஆசையொன்றே பிறவிக்கு வித்தாகுமென்ற குரோ
ஆசையுடன் பந்தபாசம் அறியாமை எரிந்தொழிய
விருப்பு வெறுப்பெல்லாம் வெந்து சாம்பலாகிடவே
ஞானத்தீ மூட்டி நான் அதுவென்றுணர்த்திடுவாய் 12

புத்தியின் சாட்சியான பரஞ்ஜோதிர்மயமான குரோ
இவ்வுலகை இவ்வுடலை மெய்யென்பது அஞ்ஞானமென்றாய்
மெய்ப்பொருளான உன்னை மறைப்பது அறியாமையென்றாய்
அஞ்ஞானம் ஒழிவதற்கு நான் யாரெனக் கேளென்றாய் 13

தோல் மாமிச இரத்தம் கொழுப்புடன் நீயல்லவென்றாய்
காதுகண் மூக்குநாக்கு தோல்நரம்பு நீயல்லவென்றாய்
ஸ்தூல சூட்சும சரீரமொன்றும் நீயல்லவென்றாய்
போக யோக தேவ சரீரமொன்றும் நீயல்லவென்றாய் 14

ப்ராணனுடன் அபானவியானமொன்றும் நீயல்லவென்றுணர
உதானனுடன் சமானனனும் நீயல்லவென்றுணர
உலகம் உடல் வர்ணாஸ்ரமம் ஒன்றும் நீயல்லவென்றுணர
புவனமுடன் பூதங்கள் கோஸமொன்றும் நீயல்லவென்றுணர 15

உன்னையே நீ நான் ஆரெனக் கேளென்று உபதேசித்த அவதூதகுரோ
அனைத்தையும் பார்ப்பவனை பார்ப்பவன் யார் எனக்கேளேன்றாய்
பார்ப்பவனை பார்ப்பதற்கு பார்வையுள்ளே செலுத்திட்டு
நானாரெனக்கேடிட்டால் நான் ஆத்மாவென்றுணர்வாய் 16

பற்றற்ற மனத்துடனே நானாரென்று நீ கேட்டிட்டால்
அனைத்தும் அறிபவன் நான் அதுவே நான் என்றிருந்திடுவாய்
ப்ரபஞ்சத் தோற்றமெலாம் பொய்யென்பாய் நீயுமாப்பா
மாயையும் மற்றுமுள்ள அனைத்தும் பொய்யென்பாய் 17

பற்றற்ற நானே மெய்ப்பொருள் பாரெல்லாம் பொய்யாகும்
கயிற்றில் கண்ட பாம்பதுபோல் காண்பதெல்லாம் பொய்யாகும்
ப்ரபஞ்சம் காணல் நீராகும் ப்ரம்மம் ஒன்றே சத்யமாகும்
அழிவற்ற நான் என்பதுவே சத்ய ஞானானந்தமாகுமென்பாய் 18

நானாரெனக்கேட்டிட்டால் நான் ஆத்மா வென்றுணர்வாய்
நானாரெனக்கேட்டிட்டால் நான் சத்யஞானானந்த மயமென்றுணர்வாய்
நானாரெனக்கேட்டிட்டால் நான் ப்ரம்மமய மென்றுணர்வாய்
நானாரெனக்கேட்டிட்டால் தான்தானாகவே நீயிருப்பாய் 19

ஏ மனமே! ஒழுக்கம் தன்னடக்கம் உனக்கும் வேண்டுமப்பா
பேராசை உள்ளமட்டும் புலன் அடங்காதப்பா
ஆசைப்படுவதெல்லாம் மாயையின் வேலையப்பா
ஆத்மாவை உணர்வதற்கு பற்றனைத்தும் விட்டிடப்பா 20

பிறந்த உடல் வளரும் வளர்ந்த உடல் மறையுமடா
அகமும் புறமும் தோன்றுகின்ற அனைத்தும் மறையுமடா
மனமாயை மயமான செயலனைத்தும் மறையுமடா
நானாரெனக்கேட்டால் நான் நீ என்கிற நினைப்பகலுமடா 21

முற்றிலும் பற்றற்றுவிட்டால் நீ முழுமுதற்கடவுளாவாய்
த்ருஷ்யம் ஓரணுவுமிலா நிர்மலன் நான் என்பாய்
அஞ்ஞானம் ஒழிந்தவுடன் ஆத்மா நான் என்பாய்
ஆத்மாவை உணர்வதற்கு ஆசைகளை துறந்திடுவாய் 22

பிறவிக்கடல் கடந்து ப்ரம்ம மயமாகிவிட
அழிவற்ற ஆத்மாவை அறிவுமயமாய் உணர
இயற்கைமயமான தன்னைத்தான் உணர
நானாரெனக்கேட்பதொன்றே ஞானசித்தர்கள் வழியாகுமப்பா 23

அழிவற்ற ப்ரம்மத்தை நானென்றுணர்ந்திடவே
அழிவற்ற சத்தியத்தை நானென்றுணர்ந்திடவே
அழிவற்ற ஞானத்தை நானென்றுணர்ந்திடவே
அழிவற்ற ஆனந்தமதை நானென்றுணர்ந்திடவே 24

அழிவற்ற ஆத்மாவை நானென்றுணர்ந்திடவே
என்றுமுள்ள பரம்பொருளை நானென்றுணர்ந்திடவே
ஸ்வயம்ப்ரகாச ஸத்குருவை நானென்றுணர்ந்திடவே
பரம்பொருளான ஸத்குருவைப் பற்றிவிட்டேன் பற்றிவிட்டேன் 25

நல்லறிவோடு உள்ளேசென்று நானாரெனக் கேட்டிட்டால்
ப்ரபஞ்சத்தைப் பொய்யாக்கி மெய்ப்பொருளை உணர்த்தி வைக்கும்
பொய்யான இவ்வுலகை மனமாயை என்றுணர்த்திவிடும்
மனமாயைப் பிசாசை ஓட்ட நானாரெனக் கேட்டிடடா 26

மனமே ஸந்ததமும் நானாரெனச் சலியாது உனக்குள் கேட்டிட்டால்
திருசியம் ஓரணுவுமற்ற உன் நிஜ ஸ்வரூபம் நானென்பாய்
பிறப்பு இறப்பு பந்தமற்ற ப்ரம்மமயம் நானென்பாய்
பரிபூரண ஆத்மாவை நானென்றுணர்வாயப்பா 27

மனமே பொய் புகலாதிருப்பதுவே பெருந்தவமாகுமப்பா
ஆசையிலாதிருப்பதுவே அருந்தவமாகுமப்பா
ஒழுக்கமுடனிருப்பதுவும் மாதவமாகுமப்பா
உலகெலாம் ஓர் உயிர் ஓர் தெய்வம் என்றிருப்பதுவும் கடுந்தவமாகுமப்பா 28

பொறாமை பொய் சூதின்றி இருப்பதுவும் தவமாகுமப்பா
பொறுமையுடனிருப்பதுவே மாதவமுமாகுமப்பா
கள்ளங் கபடற்றிருப்பதுவும் நல்ல தவமாகுமப்பா
கவலை அற்றிருப்பதுவும் அரிய தவமாகுமப்பா 29

காமமற்றிருப்பதுவோர் கடுந்தவமாகுமப்பா
குரோதமற்றிருப்பது பெருந்தவமாகுமடா
லோபமோகமற்றிருப்பதுவும் மிகச்சிறந்த தவமாகுமடா
மதமாத்சர்யமற்றிருப்பதுவே மகத்தான தவமாகுமடா 30

பூதம் புவனம் பொய் என்றிருப்பதுவே தவமாகுமடா
நாமரூபமனைத்தும் பொய் நான்நீ என்பதுவும் பொய்யாகுமடா
உற்பத்தி நாசம் பொய் உலகமும் உடலும் பொய்யாகுமடா
பார்ப்பதெல்லாம் பொய் பார்ப்பவனே மெய்யாகுமடா 31

ப்ரபஞ்ச விஷயம் பொய் ப்ரம்மலோகமனைத்தும் பொய்
வெகுவிதமாம் உலகம் பொய் ஸம்பத்தும் விபத்தும் பொய்
காரிய காரணமெலாம் பொய் காமனைகளனைத்தும் பொய்
விசித்திரமாம் விஞ்ஞானம் பொய் வித்தம் பொய் வீடும் பொய்யாகுமடா 32

இகபர கதியெலாம் பொய் இரட்டையெலாம் பொய்யாகுமடா
சுகதுக்கம் என்பதுவும் பொய் பந்த மோக்ஷமும் பொய்யாகுமடா
தேவாதிதேவர் பொய் நீ தெய்வமெனப் பார்ப்பதெலாம் பொய்யாகுமடா
நான் யாரெனக் கேட்டிட்டால் நான் தெய்வமென்றுணர்வாயடா 33

சுத்த அசுத்த மன வாக்கும் பொய் பொறிபுலன் பொய்யாகுமடா
உருவமும் அருவமும் பொய் உள்ளதெலாம் பொய்யாகுமடா
சிந்திப்பதனைத்தும் பொய் ஸங்கல்பம் பொய்யாகுமடா
இதுவதுவும் பொய் எல்லாம் பொய்யாகுமடா 34

ஶப்தம் பொய் ஸ்பரிசம் பொய் நாமரூபமனைத்தும் பொய்யப்ப்பா
முக்குணமும் குலம் கோத்திரம் முழுஉலகமும் பொய்யப்ப்பா
நான்நீ அதுவிதுவென்பதெல்லாம் சுத்தப் பொய்யாகுமப்பா
நான்நான் என்றிருப்பதொன்றே பூரண மெய்யாகுமப்பா 35

பலவிதமாம் பழக்கவழக்கமெலாம் பொய்யென்று நம்பிடுவாய்
பாரனைத்திலும் பார்ப்பவையெலாம் பொய்யென்று நம்பிடுவாய்
ஸர்வ லோகமும் பொய் ஜகமெலாம் பொய்யென்று நம்பிடுவாய்
தோன்றிய அனைத்தும் பொய் சராசரமனைத்தும் பொய்யென்று நம்பிடுவாய் 36

மதியுடன் விதியும் பொய் ஸங்கற்பமனைத்தும் பொய்யென்று நம்பிடுவாய்
க்ஷேத்திரமும் தீர்த்தமும் பொய் ஜப த்யானமெலாம் பொய்யென்று நம்பிடுவாய்
மாயையினால் தோற்றுவித்த ப்ரம்மாண்டமனைத்தும் பொய்யென நம்பிடுவாய்
இருப்பதொன்றே மெய் அதுவே நான் என்று நீ நம்பிடுவாய் 37

மனமாயை விக்க்ஷேப தோஶமெலாம் பொய்யாப்பா
வாதனைகள் பந்தங்கள் அனைத்தும் பொய்யப்ப்பா
சத்தியமாய் தான்தானாய் இருப்பதுவே சத்தியமாப்பா
பற்றிடுவாய் அவதூதன் அருள்வாக்கை பற்றற்றிருப்பதற்கே 38

ஸந்ததமும் ஸர்வமும் உணர்ந்த ஸத்குருவாக்கியத்தை
சொன்னபடி செய்திடவே உறுதி கொள்வாய் மனமே கேள்
விசித்திரமய உலகையெலாம் மித்யை என்றுணர்ந்திடுவாய்
ஸத்குருவின் அருள்வாக்கால் ஜீவன்முக்தனுமாகிடடா 39

சுருதிகளுக்குமெட்டாத உனது சுத்த ஆத்மாவை நீ உணர்வதற்கு
சொல்பொருளுக்கெட்டாத உன்னைச் சுத்த ப்ரம்மமென்றுணர்வதற்கு
நாமரூபத்திற்கப்பாலான உன்னை நான் அது என்றுணர்வதற்க்கு
சலனமிலா முழுமனதோடுன்னை நான் யாரெனக் கேட்பாயப்பா 40

மனமே ஸகல சராசரமும் மித்யையென்றுணர்வதற்கு
ஸத்குரு ஸ்வயம்ப்ரகாசர் திருவடியை பற்றிடுவாய்
அழிவற்ற உன்னைநீ உறுதியாய் உணர்ந்துகொள்ள
நானாரெனக்கேட்டிட்டபோது நான்அதுவென்றிருப்பாயப்பா 41

ஸங்கல்பமனைத்துமே அஞ்ஞானமாகுமப்பா
ஸங்கல்ப மாத்திரமே ப்ரபஞ்சம் தோன்றிடுமப்பா
ஸங்கல்பமெதுவோ அதுவே நீயுமாகிடுவாய்
ஸங்கல்ப த்யாகம் ஒன்றேயுன்னை ஞானமயமாக்கிவிடும் 42

ஸங்கல்பம் கொடிய மலமாகும் அறுதியிட்டுக்கூறுகிறேன்
ஸங்கல்பம் ஒன்றினாலே மெய்ப்பொருள் மறைந்து போகும்
மெய்ப்பொருளான உன்னை நான் அதுவென்றுணர்வதற்கு
பொய்யான நினைப்புகளை நொடிக்குள் நீ விரட்டிடுவாய் 43

அஸத்தான பொய்ப்பொருள்கள் உலகமும் உடம்புமாகும்
அஸத்தான பொய்ப்பொருள் தோற்றமனைத்துமாகும்
அஸத்தான பொய்ப்பொருள் அகத்துள் தோன்றும் தோற்றமாகும்
ஸத்தான மெய்ப்பொருள் அகத்துள்நான் என்றிருப்பதாகும் 44

அழிவற்ற ஒருபொருளே அக்ஷரமாயிருக்குதப்பா
ஓமென்ற ஒருபொருளே பரப்ரம்மாயிருக்குதப்பா
ஓமென்ற ஒருபொருளே நிர்மலமாயிருக்குதப்பா
ஓமென்ற ஒருபொருளே உனக்குள்நான் என்றிருக்குதப்பா 45

நீ பூரண ப்ரம்மமாய் ஆத்மாவாய் இருப்பதனை
நினைப்பெனும் பற்றறுத்து நானாரெனக் கேட்டால்
நானே சத்யம் நானே ஞானம் நானே ஆனந்தமயமென்பாய் நீ
தான்தானாய் இருப்பது தான் ஆத்மானுபவம் என்றுணர்வாய் 46

ஞானமே பிரஞ்ஞானமென்ற ஸத்குரோ சரணம் சரணம்
அஹம் ப்ரம்மாஸ்மி என்று அறுதியிட்டுரைத்த குரோ சரணம் சரணம்
தத்வமஸி என்றுணர்த்திய ஸத்குரோ சரணம் சரணம்
அயமாத்மா ப்ரம்மமென அகத்தியமாய் உரைத்த குரோ சரணம் சரணம் 47

ஸகல மறை முடிவான ப்ரணவ மஹா வாக்கியத்தால்
ஸத்ய ஞானானந்தம் நானென்றுணர்ந்தேனப்பா
ஒருகாலும் ஒருபொருளும் உண்மையில்லை என்றறிந்தேன்
உண்மையான மெய்ப்பொருளை நானென்றுணர்ந்தேனப்பா 48

சத்தியத்தை நானென்று ஸ்ரீ ஸத்குருவின் அருளினாலே
ஞானத்தை நானென்று அவதூதன் அருளினாலே
ஆனந்தம் நானென்று ஸ்வயம்ப்ரகாசன் அருளினாலே
அனைத்துமே நானென்றுணர்ந்தேன் ஸ்ரீ தத்தகுரு அருளினாலே 49

ஞானஸத்குரு கவசமிதை பொருளுணர்ந்தேற்றி விட்டால்
பொல்லாப்பு வினை அகன்று விதியெல்லாம் மறைந்தொழியும்
கற்பனைகளோடு காண்பது எல்லாமே பொய்யதாக்கும்
களங்கமிலா ஆத்மாவை நானென்றுணர்த்தி வைக்கும் 50

வாஸனையால் வருமுலகை நானாரெனக்கேட்டிட்டால்
உலகம் ஸொப்பனத்திற்கண்ட மனோராஜ்யம் ஆகுமடா
வறுத்த விதை முளையாததுபோல் வாஸனைகள் மறைந்தொழியும்
ஞானமயமான உன்னை நீ நான் அதுவென்றுணர்ந்திடுவாய் 51

நானாரென விசாரித்தால் பஞ்சமஹா பாபம் பொசுங்கிவிடும்
கோடி ஜன்ம பழக்கமெலாம் சாம்பல் மயமாகிவிடும்
அஸத்தெல்லாம் நாஸமாகி ப்ரபஞ்சம் பொய்யாகிவிடும்
புண்ணியபாப சிந்தனைகளனைத்துமே பொய்யாகிவிடும்
தாமரையிலை நீர்போல நான் என்றிருந்திடுவாய் 52

நானாரெனக்கேட்டால் ஆவரணமொழியும் பார்
ராகத் த்வேஷத்தோடு மோக அஹங்காரம் ஒழியும்
நிர்மலாகாசம் போல உன்னை நீ உணர்வதோடு
ஆத்ம ஶாக்ஷாத்காரம் அதிசுலபமாய் கிட்டி விடும் 53

ஸங்கல்ப த்யாகத்தாலே நீ ஸச்சிதானந்த மயமாகிடுவாய்
ஸங்கல்ப த்யாகத்தாலே நான் ப்ரம்மானந்தமென்றுணர்வாய்
ஸங்கல்ப த்யாகத்தாலே நீ ஜீவன்முக்தனுமாகிடுவாய்
ஸங்கல்ப த்யாகத்தாலே உனக்கு ஸஹஜஸமாதி கிட்டிவிடும் 54

கடந்ததை நினைத்திட்டால் காலம் வீணாகுமடா
வரப்போவதை நினைத்திட்டால் ஆசை பெருகுமடா
த்வைதத்தை உண்டாக்கும் ஸங்கல்பத்தை விட்டிடடா
நினைப்புக்கு இடம்கொடுத்தால் பிறவிக்கடல் பெருகுமடா 55

ப்ரம்மம் நானென்றால் நிஶ்சலம் உண்டாகுமடா
ஆத்மா நானென்றால் நிர்பயமுண்டாகுமடா
திடஞானமுண்டாவதற்கு நானாரெனக் கேட்டிடடா
தாமரையிலை தண்ணீர்போல் தான்தானாய் இருந்திடுவாய் 56

தத்துவத்தைப் பிரித்துப் பார்த்தால் அஞ்ஞானம் மறைந்து போகும்
தத்துவத்தைப் பிரித்துப் பார்த்தால் தான்மட்டும் மிஞ்சுமடா
தத்துவ விசாரத்தினாலே நான் ப்ரம்மம் என்றுணர்வாய்
தத்துவ விசாரத்தினாலே நான் அதுவாயிருப்பதுணர்வாய் 57

அன்னமய கோஸத்தை மலம்போல நினைத்திடடா
ப்ராணமய கோஸத்தை நினைப்பது நிக்ருஷ்டமடா
மனோமய கோஸம் நீரில்கண்ட ப்ரதிபிம்பமாகுமடா
விஞ்ஞானமய கோஸத்தை தப்தாயபிண்டம்போல் தள்ளிடடா 58

ஆனந்தமய கோஸத்தை அஞ்ஞானமென்று தள்ளிடடா
பஞ்ச கோஸமொன்றும் நானல்லவென்று தள்ளியும்நீ
ப்ரம்ம ஸாக்ஷாத்காரம் வேண்டி நான் யாரெனக் கேட்டால்
தன்னை அறிந்து நீயும் தான்தானாகி விடுவாயப்பா 59

எள்ளுக்குள் எண்ணெய் போலும் தயிருக்குள் வெண்ணெய் போலும்
கட்டைக்குள் அக்னி போலும் புஷ்பத்துள் வாசனை போலும்
சிப்பிக்குள் முத்துப் போலும் ஜபமாலைக்குள் கயிறு போலும்
சரீரத்துள் ப்ராணன் போலும் உனக்குள் ஆன்மா நானென்றிருக்குதப்பா 60

பிறந்தவனும் நீயல்ல இறந்தவனும் நீயல்ல
நினைப்பவனும் பூஜிப்பவனும் நீயல்ல நம்பிடுவாய்
கர்மத்தை செய்பவனும் காண்பதொன்றும் நீயல்ல
நாமரூப ஜடமொன்றும் நீயல்ல ஸுகதுக்கம் நீயல்ல நம்பிடுவாய்
நான் ஸச்சிதானந்த ப்ரம்மமென்றுணர நானாரெனக்கேட்டிடடா 61

ஸங்கல்பம் செய்கிறவன் அஞ்ஞானி ஆவானடா
ஸொப்பனத்தை நம்பினவன் அஞ்ஞானி ஆவானடா
தன்னை நானாரெனக் கேட்டுணராதவன் அஞ்ஞானி ஆவானடா
உன்னை நானாரெனக் கேட்டுணர்ந்தால் ஞானியுமாகிடுவாய் 62

துக்க நிவர்த்திக்கு த்வைதம் மருந்தல்ல
த்வைதத்தால் ஜனனமரண பாவபுண்ணியமுண்டாகும்
நானாரெனக் கேட்டால் தடையற்ற ஆனந்தமுண்டாகும்
நான் யாரெனக்கேட்டால் தான்தானாய் இருந்திடலாம் 63

உயிருள்ளபோதே உன்னை நானாரெனக்கேட்டு
நான் ஸச்சிதானந்தம் அழிவற்ற ஆத்மாவென்றுணர்ந்து
கானல் ஜலம் போல உலகை நீ கண்டுகொண்டு
நாமரூபமற்ற ப்ரம்மம்போல் நான் அதுவென்றிருந்திடடா 64

கற்பனைகள் கடந்த ஜோதி நானென்றுணர்வதற்கு
கற்பனைகளை த்யாகம் செய்வதொன்றே நல்ல தவமாகுமடா
அணுவளவு கற்பனைகள் ஆயிரம் கோடியாகும் பார்
ஆசை இருப்பதற்கு அடையாளம் கற்பனையாகுமடா 65

மனதின் மலமாகும் கற்பனைகள் மறவாதே
மனதின் அழுக்காகும் கற்பனைகள் மறவாதே
மனம் மாசற்றிருப்பதற்கு நினைப்புகளை விட்டிடடா
மனம் பற்றற்றிருப்பதுவே மாதவமாகுமடா 66

நிராசையோடு நீயிருந்தால் நித்யமுக்தனாகி விடுவாய்
நிராசையோடு நீயிருந்தால் நித்யானந்தனாகி விடுவாய்
நிராசையோடு நீயிருந்தால் உனதுநிஜ ஸ்வரூபம் உணர்வாயப்பா
நிராசையோடிருப்பவனே நித்ய ஞான சித்தனாவான் 67

ஆசையுள்ளவனின் மனம் கள்குடித்த குரங்காகுமப்பா
கள்குடித்த குரங்கினைத் தேள் கொட்டினாற்போல் மனமும்
கொடிய நரக வேதனைகள் ஆசையினால் வருகுதப்பா
ஆசையுள்ளவனின் மனம் மிகக் கொடிய நரகமாகுமடா 68

தனக்கயலான ஒரு திருசியமிலை என்றுணர்த்தும்
ஸத்குருவின் கவசமிதை சந்தேகம் இன்றியேத்திட்டால்
ஸங்கல்ப விகற்பமுள்ள ஜகமிலை என்றுணர்த்தும்
தெரியவரும் நாமரூப ப்ரபஞ்சமெலாம் பொய்யதாக்கும் 69

ஸத்குருவின் கவசமிதை ஸம்ஶயமின்றி பற்றிக்கொண்டு
சலனமற விசாரித்தால் சகத்தொன்றுமில்லை என்பாய்
காண்பதெலாம் காணல் நீர் கந்தர்வ உலகமென்றறிவதோடு
கயிற்றில் கண்ட பாம்பது போல் கண்டு கொள்வாய் உலகமதை 70

திருத்தமுற உனக்குள் நானாரெனக்கேட்ட அப்போதே
ஜொலிக்கும் மனோராஜ்யமெலாம் சித்ரதீபம் போலாகிவிடும்
கனவினிடைக் கண்ட பொருள் போல ப்ரபஞ்சமதாகிவிடும்
பிறவியின் வித்தெல்லாம் வறுத்த விதை போலாகிவிடும் 71

பொருளுணர்ந்து கவசமேத்தின் உலகு மலடிமகன் போலாகிவிடும்
நபும்ஸகனின் மகன்போல் ப்ரபஞ்சம் மாயமதாய் போய்விடுமே
நானாரென உனக்குள்நீயும் விசாரித்தால் நான் மட்டும் மிஞ்சும் பார்
ஸத்குருவின் கருணையினால் நீ தான்தானாய் இருந்திடுவாய் 72

ஸங்கல்பம் இருக்கும் வரை உலகை சத்யம் என்பாய் நீயும்
ஸங்கல்பமற்றவுடன் ஜகம் பொய்யாகும் என்பாய்
ஆதலினால் அத்வைத ஞானம் உதயமாவதற்கு
அனவரதம் நானாரென உனக்குள் விசாரித்திடுவாயப்பா 73

ஏ மனமே நானாரெனக்கேட்டால் ஆனந்தம் நான் என்பாய்
உனதான்மாவிற்கு அன்னியமாய் அணுவுமில்லை என்றுணர்வாய்
பரப்ரம்மம் தனக்கயலாயில்லையென்றுணர்வாய் நீயும்
தான்தானாய் இருப்பதுவே ஆத்மானுபூதி என்றுணர்வாய் 74

இருப்பதெல்லாமே பரப்ரம்மமென்றுணர்வாய் நீயும்
இருமையிலா அப்ப்ரம்மம் நானென்பாய் நீயும்
பொல்லாத பவத் துன்பமெலாம் ஒழிந்ததென்றுணர்வாய் நீயும்
நித்த பரிசுத்த பரப்ரம்மம் நானென்பாயப்பா 75

முற்றிலும் பற்றற்ற உடன் பரப்ரம்மம் நானென்பாய்
அழிவற்ற ஆத்மா நானென்று அறுதியிட்டுக் கூறிடுவாய்
நான்குவேத ஸாரமெலாம் நானே தானென்றுணர்வாய்
ஸத்குருவின் அருளினாலே தான்தானாய் இருந்திடுவாய் 76

கலிதோஷம் அகற்றுவிக்கும் கவசத்தை நம்பிடடா
மனமாயைப் பேயைஓட்டும் கவசத்தைப் பற்றிடடா
ஸங்கல்பமதை ஒழிக்கும் ஸத்குரு கவசமடா
ஸத்குரு கவசமுன்னை தான்தானாய் இருத்தி வைக்கும் 77

தான்தானாய் இருப்பது தான் கவசத்தின் பலனுமாகும்
தத்துவத்தின் ஸாரமெல்லாம் தான்தானாய் இருப்பதாகும்
தான் ஞான மயமாவதுவே சாகாக்கலையுமாகும்
தான்தானாய் இருப்பதுதான் ஸஹஜ ஸமாதியாகும் 78

கவசத்தில் சொன்னபடி செய்திடுவாய் மனமே கேள்
நானாரெனக் கேட்பதொன்றே கவசத்தின் ஸாரமப்பா
தான்தானாவதற்குண்டான கவசமிதென்றுணர்வாய்
உனக்குள் நானாரெனக் கேட்பதுதான் தான்தானாவதற்குண்டான ஸாரமப்பா 79

சத்தியத்தைச் சொல்லிவிட்டேன் சொன்னபடி செய்திடடா
சத்திய ஞானானந்தம் தான்தானாய் இருப்பதாகும்
பரிசுத்தப் பரப்ரம்மம் நான் என்றுணர்வதற்கு
நானாரெனக் கேட்டுநீயும் ஜீவன் முக்தனாகிடடா 80

உனக்குள் நானென்றிருப்பதுதான் பரப்ரம்மம் ஆகுமடா
உனக்குள் நானென்றிருப்பதுதான் உனதாத்மாவும் ஆகுமடா
உனக்குள் நானென்றிருப்பதுதான் உனதறிவும் ஆகுமடா
உனக்குள் நானென்றிருப்பதுதான் மெய்ப்பொருளும் ஆகுமடா 81

உலகிலுள்ள புத்தகத்தில் உன்னை நீ தேடிடாதே
உனதகத்துள் சென்று உன்னையும் நீ தேடிட்டால்
தானல்லாதவையெல்லாம் மின்னலைப்போல் மறைந்துவிடும்
தன்னையே நீ நானாரெனக் கேட்டபோது தான்தானாகிவிடும் 82

அவதூத மஹாபுருஷன் சொன்னபடி செய்திட்டால்
நான் ஸ்வயம்ப்ரகாசமென்று நீயும் உணர்வாயப்பா
ஸ்வயம்ப்ரகாசமே சத்யம் சத்யமே ஸ்வயம்ப்ரகாசம்
சத்யஞானானந்தமெலாம் ஸ்வயம்ப்ரகாசமாகிவிடும் 83

காண்பதனைத்தும் மித்யையென்று நீயும் உணர்வதற்கு
நானாரெனக் கேட்டுணர்ந்தால் பாரனைத்தும் பொய்யாகும்
அழிவற்ற மெய்ப்பொருள் நான் என்று நீ உணர்வாய்
நான் நான் என்றிருப்பதுவே அழிவற்ற ப்ரம்மமுமாகும் 84

ஸஹஜ ஸமாதி வேண்டின் நானாரெனக் கேட்டிடடா
தான்தானாய் இருப்பதுதான் ஸஹஜ ஸமாதி ஆகும்
உடம்பில் உயிர் உள்ளபோதே நீயுனது நிஜ ஸ்வரூபம் உணர
உனக்குள் நானாரெனக்கேட்டு உண்மையை உணர்வாயப்பா 85

ஸத்குருவின் திருவடியை முழுமனதுடன் பற்றிக்கொண்டு
கவசத்தை கருத்துடனே ஒருமனதுடன் விசாரித்தால்
கவலையையுண்டாக்குவது அறியாமை என்றுணர்வதோடு
அஞ்ஞானம் ஒழிந்து ஆன்மாவை நானென்றுணர்வாயப்பா 86

ஸகலமறை ஸாரம்சொன்ன ஸத்குருநாதனுக்கு ஜயமங்களம்
மிகவும்மகா ரகசியமான ஞானோபதேசத்திற்கு ஸுபமங்களம்
ஸர்வமும் ப்ரம்மமென்ற ஸத்குருநாதனுக்கு ஜயமங்களம்
ஸகலவேதாந்த ஸாரமான ஸத்குருகவசத்திற்கு நித்யஸுபமங்களம் 87

தன்னைத் தானாக்குவிக்கும் ஸத்குருகவசத்திற்கு ஜயமங்களம்
அகண்டபரஞானமுணர்த்திய அவதூத ஸத்குருநாதனுக்கு நித்யஸுபமங்களம்
ஞான ஸத்குருவின் திருவடிக்கு ஜயமங்களம்
ஸத்குரு கவசமோதி தன்னையுணர்ந்தார்க்கு நித்யஸுபமங்களம் 88

அழிவற்ற அவதூத மகாபுருஷனுக்கு ஜயமங்களம்
அதிசயமான தத்தகிரி குஹாலயத்தோனுக்கு நித்யஸுபமங்களம்
அருஉருவமயமான சேந்தமங்கலம் ஸத்குருநாதனுக்கு ஜயமங்களம்
அதிபரிசுத்த ஸ்வயம்ப்ரகாச ஸத்குருநாதனுக்கு நித்யஸுபமங்களம் 89

ஸ்ரீ மஹா குருப்யோ நம:
ஓம் தத் ஸத்