ஸ்ரீ சபரிமலை ஐயப்ப ஸ்வாமி கவசம்
ஓம் ஸ்ரீ கணேசாய நம:
ஓம் ஸ்ரீ சத்குரு பரமாத்மனே நம:
ஸ்வாமியே ஐ சரணம் ஐயப்பா
பூதநாத சதானந்த ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ ஸாஸ்த்ரீ துப்யம் நமோ நம:
மூலாதார கணபதியே முருகனுக்கு மூத்தவனே
ஸஹஸ்ரார கமலத்தில் சத்ய ஞானானந்தமாயிருப்பவனே
முழுமுதற் கடவுளான பஞ்சமுக கணபதியே
எனதுயிர்க்குயிரானவனே ஐயன் ஐயப்பன் கவசமருள்வாய்
சபரிமலை தர்ம ஸாஸ்தாவே சேலம் ஸ்கந்தாஸ்ரமம் இருப்பவனே
ஹரிஹரனின் ஸத்புத்திரனே அறியாமையை அகற்றுபவனே
ஐயப்ப ஸ்வாமியே உனதடிமையைக் காத்திடுவாய்
அரிய நொடிக்குள் ஐயப்பா இவனகத்துள் வந்திடுவாய்
ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியே சின்முத்திரையுடன் இவன் முன்வருவாய்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியானவனே சின்முத்திரையுடன் இவன் முன்வருவாய்
ஸ்ரீ தத்தகுருநாதா சின்முத்திரையுடன் இவன் முன்வருவாய்
ஸ்ரீ ஆதிசங்கர ஜகத்குருநாதா சின்முத்திரையுடன் இவன் முன்வருவாய்
சபரிமலைமேல் சதானந்தமாயிருப்பவனை நம்பிவிட்டேன்
சபரிமலைமேல் சத்யமாயிருப்பவனை நம்பிவிட்டேன்
சபரிமலைமேல் ஞானானந்தமாயிருப்பவனை நம்பிவிட்டேன்
சபரிமலைமேல் ஞானஸத்குருவாயிருப்பவனை நம்பிவிட்டேன்
உடம்பினைப் பெற்றபயன், உன்னை எனதாத்மாவா யுணர்ந்திடவே
உடம்பினைப் பெற்றபயன், உன்னை என் உயிர்க்குயிராயுணர்ந்திடவே
உடம்பினைப் பெற்றபயன், உன்னை எனதறிவாய் அறிவதற்கே
உடம்பினைப் பெற்றபயன், உன்னை அன்பு உருவாய் தெரிந்துகொள்வதற்கே
ஸத்ஸ்வரூப தர்ம ஸாஸ்தாவே! சித்த சுத்தியை தந்திடுவாய்,
சித்ஸ்வரூப மணிகண்டா! மனமாயை மாய்த்திடுவாய்
ஆனந்தமயமான ஐயப்பா! அஞ்ஞானமதை எரித்திட்டு
உனது சின்முத்திரையின் ரஹசியத்தை இவனுக்குணர்த்திடுவாய்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே! இவன் உறுதியாய் அறம் செய்ய அனுக்ரஹிப்பாய்
இவனகத்துள் இடைவிடாதுன்னை, ‘நான்’ என்று உணர்த்திடுவாய்
உன்னையொழிய ப்ரபஞ்சத்தில் ஒன்றுமில்லை என்றறிய
எனக்குள் ஐயப்பா, உனதுருவத்தை இருத்திவைப்பாய் இக்கணமே
ஈரேழுலகில் எங்கும் நிறைந்த சக்தியெல்லாம் ப்ரம்மஸாஸ்தாவின் சக்தியென்று உள்ளும் புறமுமுனது சக்தியை நானுணர,
எனக்கு நீ ஐயனே! வரம் அருள்வாய், வரம் அருள்வாய்!
ஆதி அநாதியான அழிவற்ற ஐயப்ப ஸ்வாமியே! கேட்டிடுவாய்
உண்மையான, உனது மஹாமந்திரத்தை இவனுக்குபதேசிப்பாய்
மகனே! ‘ஓம்’, என்று ப்ரணவத்தை உனக்குள் ஜபித்திடுவாய்,
ஓமென்ற ஓங்காரத்தினுட் பொருள் ‘நான்’தான் மறவாதே!
‘ஓம்’, ஓம் மென்றுனது மூச்சை உள்ளே வாங்கி விட்டிடுவாய்,
‘ஓம்’, என்ற மந்திரமே, எனது மஹாவாக்ய மந்திரமாகுமப்பா.
காமனைகளுடன், மோக்ஷத்தை ப்ரணவ ஜபம் தந்துவிடும்
மிகக் கொடிய துன்பத்தை, அகந்தையை ஒழித்துவிடும்
காமக்ரோதத்துடன் பொய், பொறாமையை எரித்துவிடும்
பேராசையை ஒழித்துன்னை ப்ரம்ம மயமாக்கிவிடும்
ப்ரணவ மயமான ஐயன், ஐயப்ப ஸ்வாமியே! கேட்டிடுவாய்,
பம்பாதீர ஜோதியனே! பரம்பொருளே! கேட்டிடுவாய்
ஞானக் கண்ணைத் திறந்திடுவாய், ஞான பாஸ்கரனே! கேட்டிடுவாய்,
ஐயப்பா! உள்ளிருந்து அகவிருளை விரட்டிடுவாய்
இவன் புருவத்தின் நடுவிலுனைப் ப்ரம்ம ப்ரணவமாய் நான் உணர,
இவன் ப்ரம்மரந்திரத்தில் உன்னை பரப் ப்ரம்மமாய் நானுணர
இவனகத்துள் ஐயப்பனை ஆத்மாவாய் நானுணர
இவனறிவாய், இவனுயிராய், இவன் ஐயப்ப ஸ்வாமியாயுணர வரமருள்வீர்.
நித்ய மங்கள ஸ்வரூபமான சபரிமலை ஸாஸ்தாவை, அன்பு மயமாய் நானுணர
மனமௌனத்துடனிருந்து; ஐயனின், நிஜஸ்வரூபமதை ‘நான்’ நான் என்று எனக்குள் இவன் உணர
புவனத்தை பொய் என்றுணர்த்திய புவனசுந்தரனை, அகத்துள் ‘நான்’ என்றுணர
எனக்கு வரமருள ஹரிஹரசுதன் ஐயப்ப ஸ்வாமியாய் எனக்குள் வந்திடுவாய்.
இவன் ஆணவத்தை வேரறுக்க ஐயப்ப ஸ்வாமியே! இவன் முன்வருவாய் ,
விண்ணாய நிர்மலவடிவமுள்ள சபரிமலை ஸாஸ்தாவே! இவன் முன்வருவாய்,
இவன் அகங்கார மதையொழிக்க, அரிய நொடிக்குள் இவன் முன்வருவாய்;
இவன் மனமாசுகளை, அகற்றி இவனை, மாமனிதனாக்கிவிட இவன் முன்வருவாய்
தன்னை அறிவதே தத்துவத்தின் ஸாரமென்ற சபரிமலை ஸத்குருநாதா!
வாக்கு மனமில்லா விடத்தே உன்னை, எனக்குள் நானென்றுணர்த்திடுவாய்,
பாராதி பூதமொன்றும் நீயல்லவென்று உபதேசித்தாய்.
தோற்ற மனைத்துமே, ஐயப்பா! நீ, மனமாயையின் வேலையென்றாய்.
ஐயப்பன் சின்முத்திரை, சத்தியத்தை உணர்த்து மடா,
ஐயப்பன் சின்முத்திரை, மெய்ஞானத்தை உணர்த்து மடா,
ஐயப்பன் சின்முத்திரை, அழிவற்ற ஆனந்தமதை உணர்த்து மடா,
ஐயப்பன் சின்முத்திரை, உனது நிஜஸ்வரூபத்தை உணர்த்துமடா.
சின் முத்திரையைக் காட்டி, ஐயன் ஜீவனைச் சிவமயமாக்கிடுவான்
சின்முத்திரையைக் காட்டி, ஐயன் உன்னை சிதானந்தத்திலிருத்திடுவான்
சின் முத்திரையைக் காட்டி, ஐயன் உன்னை பரம் பொருளாக்கிடுவான்
சின் முத்திரையைக் காட்டி, ஐயன் உன்னை ஜீவன்முக்தனாக்கிடுவான்
சபரிமலை ஸ்வாமியே! சரணம், சரணம் பொன்னய்யப்பா,
சரணமடைந்திட்டேன், இவன் சங்கடங்களைத் தீர்த்திடுவாய்.
ஐயப்ப ஸ்வாமியே! இவன் அறியாமையைப் பொசுக்கிடுவாய்,
சபரிமலை தர்மஸாஸ்தாவே! இவனை, ஸத்ஸங்கத்தில் இருத்திடுவாய்.
மணிகண்ட ஸ்வாமியே! இவன் மஹாபயத்தை போக்கிடுவாய்,
ஐயன், ஐயப்பஸ்வாமியே! வெள்ளை யானையின் மேல் வந்திடுவாய்,
சபரிமலை தர்ம ஸாஸ்தாவாய், ப்ரபஞ்சத்தைக் காணச் செய்வாய்,
ப்ரம்ம மயமான ஐயனே! இவனைப் பரப்ரம்மமய மாக்கிடுவாய்
அறநெறியுடன், அகத்தெளிவோடு, மன உறுதியையும் தந்திட்டு சபரிமலை
தர்ம ஸாஸ்தாவே! இவன் சிந்தையில், நீ, சிவமயமாய்த் தோன்றிடுவாய்,
தாமரையிலை மேலுள்ள தண்ணீர்போல், இவனையும் நீ இருந்திடச் செய்,
காணல் நீர் போன்று இவ்வுலகைக் கண்டிடச் செய்திடுவாய்.
சிப்பியின் வெள்ளியைப் போல், இவ்வுலகைப் பார்த்திடச்செய்,
கயிற்றில் கண்ட பாம்பினைப் போல், ப்ரபஞ்சத்தை நினைத்திடச் செய்
ஐயப்ப ஸ்வாமியே! உனது நிஜஸ்வரூபத்தை, இவன் ‘நான்’ என்றுணர்வதற்கு
மகர ஜோதிஸ்வரூபனே, சபரிமலை தர்மஸாஸ்தாவே! வரமருள்வாய், வரமருள்வாய்.
உலகில் அன்புமதமொன்றே சத்திய மாய் இருக்கு தென்றாய்,
உலகில் உண்மையான மதம், உனதுள்ளன்பிற்குள் இருக்குதென்றாய்,
ஐயப்பன் நிஜஸ்வரூபம், அன்புமயமாகு மென்ற ஸத்குருநாதா!
அன்பு வழிபாடொன்றே, ஐயப்பன் வழிபாடாகுமென்றாய்.
ப்ரபஞ்சத்தில் பல்வேறு உருவமுள்ள ஐயனைச் சரணடைந்தேன்
ப்ரபஞ்சத்தில் மனிதவுருவமெல்லாம் மணிகண்டனின் உருவமென்ற ஸத்குருநாதா,
ப்ரபஞ்சத்தில் உள்ளதெல்லாம் ஐயன், ஐயப்ப ஸ்வாமியென்றாய் ஸத்குருநாதா,
ப்ரபஞ்சத்தில் அசையும் அசையாப் பொருளெல்லாம் ஹரிஹரசுதனாகுமென்றாய் ஸத்குருநாதா,
உள்ளன்போடு, ஒழுக்கம், கருணையுடன் ஆறம் செய்வதொன்றே தவமாகுமென்றாய்
மன அழுக்கை போக்குவதே, மஹத்தான தவமாகுமென்றாய் ஸத்குருநாதா,
ஆசையொன்றே அகத்தினிலுள்ள, அழுக்காகுமென்றகுரோ! ஐயப்பா!!
ஆசையே, பிறப்பையும், இறப்பையும், உண்டாக்குமென்றாய், ஸத்குருநாதா!
அண்டங்கள் அனைத்துமயமான ஐயன், ஐயப்ப ஸ்வாமியே, கேள்,
உயிருள்ள இவனுடலை, உனது கோவிலாய்க் கொண்டுவிட்டேன் ,
இவனுள்ளத்தில் ஐயப்பா! ஆத்மலிங்க மாயிருந்திடுவாய்.
எனக்குள் ‘நான்’, உன்னை ஆத்மலிங்க மென்றுணர வரமெனக்கு அருள்வாய்.
ஐயப்பா! உன்னை இவனகத்துள் அழிவற்ற ஆத்மாவாய் ‘நான்’ உணர வரமருள்வாய்.
மன அமைதியுடன் தூய அறவழியை உறுதியுடன் பற்றிடச் செய்.
உடல் வளத்துடன், மன நலத்தையும், உறுதியாகத் தந்திடுவாய்.
இவனுடலை, உனது திருக்கோவிலென்று உறுதியாக நம்பிடச்செய்.
இமயமலை போல் இவனகத்துள் உன்னை அசையாதிருத்தி வைத்திடுவாய்.
எங்கும் நிறைந்திருக்கும் சபரிமலை ஸாஸ்தாவே! இவனுள்ளொளியாய் இருந்திடுவாய்.
அண்ட, பிண்டமனைத்துமயமான ஐயப்பா! இவனாத்மாவை நீயென்று உணர்த்திடுவாய்.
ஹரிஹரனின் நிஜஸ்வரூபமயமான ஐயப்பா! இவனகத்துள், உன்னை ‘நான்’ என்றறிந்திடச் செய்.
ஈரேழுலகம் நிறைந்த ஹரிஹரசுதன் ஐயப்பா! போற்றி! போற்றி!
ஆகாயம் போன்றிருக்கும் ஐயன், ஐயப்ப ஸ்வாமியே! போற்றி! போற்றி!
எனதறிவை, ஆத்மாவை, எனதுயிராயிருந்துவரும் ஸ்வாமியே! போற்றி! போற்றி!
ஜகத்குருவான, ஜகத் ரக்ஷகா ஐயப்ப ஸ்வாமியே! போற்றி! போற்றி!
எங்கும் நிறைந்து எல்லாமு மாகியுள்ள ஐயப்பா! போற்றி! போற்றி!
அண்ட, பிண்டம் அனைத்து மயமான, ஐந்துமலை ஸாஸ்தாவே! போற்றி! போற்றி!
ஐராவதப் ப்ரியனே! அகத்துள்ளாத்மாவாயிருப்பவனே! போற்றி! போற்றி!
ஐயங்களைத் தீர்த்தருளும் ஓங்காரமயமானவனே! போற்றி! போற்றி!
ஒப்பில்லா மணியே! மணிகண்ட ஸ்வாமியே! போற்றி! போற்றி!!
அகந்தையை அழித்து, ஆதரிக்கும் தெய்வமே! போற்றி! போற்றி!!
ஆசையை வேரறுத்து, ஆன்மாவேதானென்றாக்கும் பகவானே! போற்றி! போற்றி!!
பேராசையைப் பெயர்த்தெறிந்து, நிராசையுடன், இவனை, இருத்திவைக்கும் ஐயப்ப ஸ்வாமியே! போற்றி! போற்றி!!
கண்டெடுத்த மணிகண்டா! கலியுகத் தெய்வமே! போற்றி! போற்றி!!
வில்லாளி வீரனே, வீரமணிகண்டனே! போற்றி! போற்றி!!
ப்ரம்மஸாக்ஷாத்காரம் அருள்கின்ற ஸத்குருநாதனே! போற்றி! போற்றி!!
ஞான சாகரனே! இவன், ஞானக் கண்ணைத் திறந்திடுவாய், போற்றி! போற்றி!!
அமுத நதிவாசனே! ஹரிஹரசுதனான ஐயப்பா! போற்றி! போற்றி!!
யானைமுகன் தம்பியே! மோஹினிபாலனே! போற்றி! போற்றி!!
ஆச்சாங்கோவில்லரசே! ஆறுமுகன்தம்பியே! போற்றி! போற்றி!!
இவ்வுலகரக்ஷகனே! எரிமெலி ஸாஸ்தாவே! போற்றி! போற்றி!!
ஆர்யங்காவின் அரசே! இவன் அறிவுமயமானவனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
ஊழ்வினையைத் துடைத்திட்டு, உற்ற துணையாயிருப்பவனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
ஒப்பற்ற தெய்வமே! ஓசைஒளிமயமானவனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
அம்பிகை பாலனே! அன்னதானப் ப்ரபுவே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
கலியுகவரதனே! நற்கதிதரும் தர்மஸாஸ்தாவே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
காந்தமலை ஜோதியே! எனதிஷ்ட தெய்வமே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
பதினெட்டாம் படிக்கதிபதியே! பரம்பொருளானவனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
புவனம் பதினான்கும் நிறைந்தவனே! புவன சுந்தரமூர்த்தியே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
ஆகாயம் போன்ற ஹரிஹரசுதனே! அன்புமயமானவனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
அனைவர் உள்ளத்தில் அறிவாய், அன்பாய், ஆத்மாவாயிருப்பவனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
ஆதி அந்தமில்லா, அருட்பெரும் ஜோதிஸ்வரூபனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
சேலம், ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில், ஜகத் ஜோதிர்மய மாயிருப்பவனே ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
ஞானச் சுந்தரனாய், சேந்தமங்கலம், தத்தகிரி முருகனாலயத்தில் உறைபவனே ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
புதுக்கோட்டை அதிஷ்டானத்தில், புவனமுய்ய அமர்ந்த ஐயப்பா! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
ஆதிசங்கரர் அவதரித்த கேரளத்தில் பிறந்த மணிகண்டா! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
மனத்தை மௌன மாக்கி கொண்டவனுள் மகர ஜோதியாயிருப்பவனே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
மெய்ஞான மயமான ஐயன், ஐயப்ப ஸ்வாமியே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
செம்மையுள்ள மனதிற்குள், சிவமயமாயிருப்பவனே ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
சின்முத்திரையுடனிருக்கும், சபரிமலை தர்ம ஸாஸ்தாவே! ஸாஷ்டாங்க நமஸ்காரம்.
புறப்பொருள்களோடு அகப்பொருள் மயமாயிருக்கும், ஐயப்பஸ்வாமியே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
ஆதிமூலச் செழுஞ்சுடரெ, ஆதிஅந்தமற்ற ஐயப்பா, வணக்கம்! கோடி வணக்கமப்பா!
மெய்ப்பொருள் மயமான, ஸத்குருநாதனான ஐயனே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
பந்தபாசமதை எரிக்கும், எரிமேலி ஸாஸ்தாவே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
நால்வேதப் பொருளோனே! வேதாந்தஸ்வரூபனே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
எங்கும் நிறைந்த, ஆதிகுருநாதனான ஐயப்ப ஸ்வாமியே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
அல்லல் வினையறுக்கும், மெய்ப்பொருளே! பேரொளியே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
சின்முத்திரை காட்டி, இவன் ஜீவனைச் சிவமாக்கிவிட்ட ஐயப்பா! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
கனவில் கண்டதைப் போல், உலகில் காண்பதெல்லாம், பொய் என்ற அச்சங்கோவில்லரசே வணக்கம்! கோடி வணக்கமப்பா!
மனவாக்குக் கெட்டாத, பரம்பொருளான குளத்துபுழைபாலனே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
இவனை நாடிவரும் இருவினைகளைச் சுட்டெரித்த மணிகண்டா! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
இவன் தந்தை, தாய், பந்து மித்திரருடன், ப்ரபஞ்சமனைத்துமானவனே! வணக்கம்! கோடி வணக்கமப்பா!
ஏகமனேகமான பம்பாநதிதீரனே! உன்னை எனதாத்மாவாய் உணர்த்திடுவாய்.
தர்மஸாஸ்தாவே! உனதடிமைக்கு அஞ்சா நெஞ்சத்தை அனுக்ரஹிப்பாய்.
குறைவற்ற செல்வத்தோடுனது, சீரும் சிறப்பும் மிக்க, கல்வியைத் தந்திடுவாய்.
காணுதற்கரிய சபரிகிரி ஸாஸ்தாவே எனக்குள் ‘நான்’, எனதுயிருக்குயிராய்க் கண்டு கொள்ளச் செய்திடுவாய்.
எவர்க்கும் தெரியாத ஐயனின் நிஜஸ்வரூபத்தை அகத்துள் ‘நான்’ என்று கண்டு கொள்ள வரமருள்வாய்.
பரிசுத்தமயமான காந்தமலை ஜோதியை ‘நான்’, பரஞ்ஜோதிஸ்வரூபமாகக்கண்டு கொள்ளச் செய்திடுவாய்
பிறவியை அறுத்தெறியும் ப்ரணவ ஸ்வரூபனை அகத்துள் ‘நான்’ என்று உணர்ந்திடச் செய்திடுவாய்.
புவனசுந்தரனான ஐயன், ஐயப்ப ஸ்வாமியை சேலம், ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் கண்டுகொண்டேன்.
விண்ணவர்கள் போற்றும் ஐயப்ப ஸ்வாமியே! உனது நிஜஸ்வரூபமதை எனக்குள் காட்டிடுவாய்.
அறியாமை நோயகற்றி, இவன் பற்றனைத்தும் அறுத்திட்டு இவனகத்துள், நீ, ஆத்ம ஜோதிர்மயமாகிடுவாய்.
விருப்பு வெறுப்புடன் கற்பனைகளின் வேரறுத்து இவன் நினைப்பினைச் சாம்பலாக்கிடுவாய்.
சபரிகிரிமேலே ஐயன், ஐயப்ப ஸ்வாமி, தான் தானாஇருப்பதைப் பற்றிடடா.
உனக்குள் நீசென்று உன்னையே நீ ‘நான் யார்’, எனக்கேட்டால் தான்தானாய் நீயிருந்திடலாம்.
உனக்குள் ‘நான்’, ‘நான்’, என்றிருப்பது தான், ஐயன் ஐயப்ப ஸ்வாமியடா.
தன்னையே ‘நான் யாரெனக்’ கேட்டுணர்வதுடன் சபரிமலை தர்மஸாஸ்தாவின் உபதேசமாகும்
ஏ, மனமே! தான் தானாயிருப்பதுடன் ஸத்குரு ஐயப்பனின் சின்முத்திரையின் ரகசியமுமாகும்.
முப்பாலுக்கப்பாலிருக்கும் முழுமுதற் கடவுளான தர்மஸாஸ்தாவே கேட்டிடுவாய்
சரணமடைந்திட்டேன் செப்பாய் அருள்கூர்ந்து உனது ஜபம் செய்யும் மந்த்ரமதை,
மகனே! எனது மஹாமந்திரம் அழிவற்ற ஓங்காரமாகுமப்பா மறவாதே!
ஓம், ஓம், என்று உள்ளத்தில் ஜபித்திட்டால் எனது நிஜஸ்வரூபத்தை, நீ, ஓமென்று உணர்ந்திடுவாய்
மறைமொழியின் ஸாரமெல்லாம் ப்ரணவமென்று உபதேசித்த ஐயன் ஸத்குருநாதா
ப்ரணவத்தை ஓதி அதன் மெய்ப்பொருளை உள்ளொளியாயுணர்ந்திடுவாய்
உருவத்துடன் அருவமும் ஈரேழுலகமுமே ஓங்கார மாகிவிடும் நம்பிடுவாய்.
மெய்ப்பொருளான ஐயன், ஐயப்பனின் நிஜஸ்வரூபம் ப்ரணவமென்றாய் நம்பிவிட்டேன்.
ப்ரணவத்தை ஜபிப்பதுவே பக்திநெறி, கர்ம, யோக நெறி, மெய்ஞான நெறி ஆகுமப்பா,
ப்ரணவத்தை, மனமௌனத்துடன் த்யானித்தால், உனது நிஜஸ்வரூபத்தை நீயும் உணர்ந்திடுவாய்.
ஹரிஹரசுதனய்யன், ஐயப்பஸ்வாமியை ‘நீ’, அகத்துள் ப்ரணவமென்றுணர்ந்திடுவாய்
உனதுடலை உயிருள்ள கோவிலாக தர்ம ஸாஸ்தா உன்னைப் படைத்துவிட்டான்.
உனதிதயத்துள் ஐயப்பன் ‘ஓம்’ என்று உண்மையாயிருக்கின்றான் நம்பிடுவாய்.
உனதாத்மாவே ஐயப்பன், உனதறிவும், அன்பும், ஐயப்ப ஸ்வாமியென்று நம்பிடுவாய்.
உலகிலுள்ள உயிர்களெல்லாம் ஐயப்பன், உணதுயிரும் ஐயப்ப ஸ்வாமியடா மறவாதே!
ஹரிஹரசுதனான ஐயன், ஐயப்ப ஸ்வாமியே இவனைக் கிழகிலும் தென்கிழக்கிலும் காத்து ரக்ஷிப்பாய்.
ஹேரம்ப கணபதியின் சஹோதரா, இவனைத் தென்திசையிலும், தென்மேற்கிலும் காத்துரக்ஷிப்பாய்.
ஸ்ரீருத்ர குமாரா, என்னை மேற்கிலும், வடமேற்கிலும் காத்து ரக்ஷிப்பாய்.
பரம புருஷனான ஐயனே, என்னை வடக்கிலும், வடகிழக்கிலும் காத்து ரக்ஷிப்பாய்.
சபரிமலை தர்மஸாஸ்தாவே! இவனை, மேலும், கீழும் காத்திடுவாய்
பரஞ்ஜோதிக் கடவுளான ஐயனே; இவனைப் பத்துத்திக்கிலும் காத்திடுவாய்
ஹரிஹரனின் ஆதிசக்தியே, இவனை முன்புறமும், பின்புறமும் காத்திடுவாய்
ஜெய ஜெய சங்கரா, இவன் இடமும், வலமுமாயிருந்து காத்திடுவாய்.
யோகயோகேஸ்வரனான ஐயப்ப ஸ்வாமியே! இவன் சிகையையும், சிரசினையும் ரக்ஷிப்பாய்
க்ருபா நிதே! இவன் நெற்றியையும் புருவங்களையும் ரக்ஷிப்பாய்
ஹரிஹரசுதனே! இவன் புருவத்தின் நடுவையும், நாசியையும் ரக்ஷிப்பாய்
கங்காதரனின் சுதனே! இவன் கண்களிரண்டுடன், செவிகளையும் காத்து ரக்ஷிப்பாய்
ஸ்ரீகண்டனான சிவபரம்பொருளே! இவன் கன்னங்கள் இரண்டையும் காத்து ரக்ஷிப்பாய்.
ஜடாதரனான ஸர்வேஸா இவனுதட்டையும், நாகையும் காத்திடுவாய்.
பசுபதீஸ்வரனான பரமேஸ்வரா! இவன் தாடையையும், வாக்கையும் காத்திடுவாய்
பரம் பொருளான பக்தவத்ஸா! இவன் பற்களைக் காத்திடுவாய்.
காந்தமலை ஜோதியனே! இவன், கை, கால் விரல்களைக் காத்து ரக்ஷிப்பாய்.
ஏழுமலை வெங்கடேசா! இவன் வயிற்றையும், மார்பினையும் காத்து ரக்ஷிப்பாய்.
ஐயன், ஐயப்ப ஸ்வாமியே! இவன் மனத்தை, இதயத்தைக் காத்து ரக்ஷிப்பாய்.
கேசவா, மாதவா, இவன் தொப்புளுடன், அடிவயிற்றையும் காத்து ரக்ஷிப்பாய்.
இவன் குலதெய்வமே! இவன், குஹ்யத்தை குறியைக் காத்து ரக்ஷிப்பாய்.
பூதநாதா சதானந்தா! இவன் குதத்தையும், இடுப்பையும் காத்து ரக்ஷிப்பாய்.
அச்சுதானந்தா கோவிந்தா! முழங்கால், கணுக்கால்களை காத்து ரக்ஷிப்பாய்.
கேசவா! நாராயணா! இவன், ரோமத்துவாரங்களையெல்லாம் காத்து ரக்ஷிப்பாய்.
மாதவா! மஹேஸ்வரா! இவன் உள்ளங்கால்களை காத்திடுவாய்! காத்திடுவாய்!
தாமோதரா! தயாநிதே! இவன், நகங்களையெல்லாம் காத்திடுவாய்! காத்திடுவாய்!
வைத்யநாதா! ஈஸ்வரனே! இவன் தோல், ரக்தம், மஜ்ஜையைக் காத்திடுவாய்! காத்திடுவாய்!
ஹரிஹரனின் ஆத்ம ஸ்வரூபனான, ஐயப்ப ஸ்வாமியே! இவன், வீர்யத்தைக் காத்திடுவாய்! காத்திடுவாய்!
பத்மநாபா! பகவானே! இவன், அந்தக்கரணத்தைக் காத்து ரக்ஷிப்பாய்
வேதமூர்த்தியே, இவன் ப்ராண, அபான, வியானனுடன், சமானவுதானனையும் காத்து ரக்ஷிப்பாய்
காசிவிஸ்வநாதா! இவன் அழிவற்ற ஐஷ்வர்யம், புகழ், கீர்த்தியைக் காத்து ரக்ஷிப்பாய்
பூதநாதனான ஐயப்பா! இவன் அழிவற்ற நிஜஸ்வரூபம் ஆத்மாவென்று உணர்த்திடுவாய்.
தர்மஸாஸ்தாவே! இவன் செய்துள்ள சமஸ்த பாபங்களையும் பொசுக்கி சாம்பலாக்கிடுவாய்
இவனைக் கெடுக்கும் எல்லா விஷயங்களையும் எரித்திட்டு ரக்ஷிப்பாய்
மிகக்கொடிய மந்திர, யந்திர, ஆபிசாரங்களையெல்லாம் அறவே பொசுக்கிடுவாய்
மக்களைக்கெடுக்கும், மாலா, தாகினீ, சாகினீ , க்ரஹ, பூத, பிசாசுகளை எரித்து
சாம்பலாக்கிடுவாய்
யக்ஷ, கந்தர்வ, கிங்கர, ப்ரம்ம ராக்ஷஸர்களிடமிருந்து ப்ரபோ! என்னைக் காத்திடுவாய்
கொடிய வேதாள, குக்ஷ்மாண்ட, துஷ்ட தேவதைகளிடமிருந்து, இவனை ஐயனே! ரக்ஷிப்பாய்
பரஞ்சோதிப் பெருஞ்சுடரே! உள்ளொளிக்குள் உள்ளொளியான ஐயன் ஐயப்ப ஸ்வாமியே! கேள்,
அன்பொளிப் பிழம்பானவனே, சபரிமலை தர்ம ஸாஸ்தாவே! இவன் உடலைக் காத்திடுவாய், காத்திடுவாய்.
அணுவிற்கணுவானவனே! சபரிமலை தர்ம ஸாஸ்தாவே! கேட்டிடுவாய்
மஹத்திற் கெல்லாம், மஹத்தான, மஹா புருஷனான தர்ம ஸாஸ்தாவெண்! மனச்சாந்தியைத் தந்திடுவாய்.
இக்கணமே ‘நான்’, எனக்குள் தான் தானாயிருந்துவர, ஐயப்ப ஸ்வாமியே! வரமருள்வாய்
தர்மஸாஸ்தாவான, ஸத்குருநாதா! உலகில் உண்மையான மெய்த்தவம் தான் தானையிருப்பதென்றாய்
இவன் அல்லல்களை அகற்றும் உனதடியாருடன் உனதடிமையைக் கூட்டிவைப்பாய்
சதாகாலம் உனது ஸத்சங்கத்தில் இருத்தி வைத்து, இவனயும், நீ, நல்லவனாக்கிடுவாய்
இம்மையில் இவனிதயத்திலே, உன்னை ‘நான்’, என்று உணர்த்திவைத்து
தான், தானாயிருந்துவரும் சஹஜ ஸமாதியில், இவன், சஹஜமாயிருந்துவர வரமருள்வாய்.
ஐயப்பனைச் சரணடைந்தால், அலறியோடும் அகங்கார, மமகாரமெல்லாம்
தர்மஸாஸ்தா, ஐயன், ஐயப்பன் பெயர் சொன்னால், மனமாயை மாண்டுபோகும்
ஐயப்பா! சரணமென்றால், உனது அகம், புறம், பரிசுத்தமாகிவிடும்
பிறவிப் பிணியகற்றும், ப்ரம்ம ஸாஸ்தாவை பற்றிவிட்டால், பற்றெல்லாம் பறந்தோடிவிடும்
அனாத ரக்ஷகனான, ஐயப்பனை, நம்பிவிட்டால் அதிசயமான அஷ்டமாசித்திகிட்டும்
சத்யமயமான தர்மஸாஸ்தாவை நம்பிவிட்டால் அஞ்ஞானமகன்றொழியும், மறவாதே!
நினைத்தவரமருளும், ஐயனைச் சிக்கெனப் பற்றிவிட்டால் உனதுசங்கல்பம் சாம்பலாகிவிடும்
சபரிமலை ஸத்குருவின் சின்முத்திரையின் ஸாரமதை உணர்ந்திட்டால் நீ ஜீவன்முக்தனாகிவிடுவாய், மறவாதே!
மனமே! நீ, காண்பதெல்லாம் ஐயப்பன்! உனக்குள்ளிருந்து காண்கிறவனும் ஐயப்பன், மறவாதே!
இருப்பதெல்லாம் ஐயப்பன்! உனக்குள் ‘நான்’, என்றிருப்பவனும் ஐயப்பன்! மறவாதே!
நானும், நீயும், ஐயப்பன்! ‘நான்’, என்று எல்லோர் அகத்திலிருப்பவனும் ஐயப்பன்! மறவாதே!
மனமே! ஹரிஹரபுத்ரனின், நிஜஸ்வரூபம், அகத்துள் ‘நான்’, என்றிருப்பதுதான் சத்யமாகும், மறவாதே!
ஈரேழுலகெல்லாம் அழிவற்றிருந்துவரும், ஹரிஹரசுதன்! ஐயன்! சரணம்! சரணமப்பா!
இவனை மனிதரில் தலையாய மாமனிதனாக்கி மன அமைதியைத்தந்திட்ட ஸ்வாமியே! சரணம்! சரணமப்பா!
இவன், நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும், உன்னை நினைத்திடச் செய்திட்ட தர்மஸாஸ்தாவே! சரணம்! சரணமப்பா!
இவன் உன்னைத் துடித்துத் தொழுதிட்டுக் கூத்தாடிட வரம் தந்த ஸ்வாமியே! சரணம்! சரணமப்பா!
ஹரிஹரனின், நிஜஸ்வரூபமான, ஐயன், ஐயப்ப ஸ்வாமியுன்னை வழிபடும், தவத்தினர் அழியாச் செல்வத்தோடிருந்திடுவார்
முழுமுதற்கடவுளின் குமாரா, ஐயப்பா, உன்னை நம்பினவரெக்காலமும் துக்கப்படார்
ஐயப்பா! உனது சின்முத்திரையின் ரகசியம் அறியாமையை எரித்து ஆத்மாவை உணர்த்திவிடும்.
மனமே! அறுதியிட்டு உபதேசித்த ஐயன்! ஐயப்ப ஸ்வாமியின் அருள்வாக்கை, நம்பிடுவாய், நம்பிடுவாய்!!
பஞ்சமஹாபாபத்தைப் பொசுக்கி, இவனை பரிசுத்தனாக்கிவிட்ட ஐயனே கேட்டிடுவாய்
பூதநாதா சதானந்தனான, தர்ம ஸாஸ்தாவே, உனது மஹாமந்திரத்தின் மஹிமை சொல்லுக்கடங்காதப்பா!
அஞ்ஞான மொழித்திட, காந்தமலை ஜோதியனை, அகத்துள்ளிருத்திவிட்டால்
கோடானகோடி பிறவியில் செய்தமிகக் கொடிய பாவமெல்லாம் வெந்து சாம்பலாகிவிடும், மறவாதே!
ஏ மனமே! கேள், தர்ம ஸாஸ்தாவின் மஹத்தான மஹிமையுள்ள மஹாமந்திரத்தை
ஓம் ஹரிஹர புத்ராய, புத்ரலாபாய!
மஹா ஸாஸ்த்ரே, சத்ரு நாசனாய!
மதகஜ வாஹனாய, ப்ரத்யக்ஷ ஸுலாயுதாய!
வர வரத ஸர்வஜனமே வஸமானாய ஸ்வாஹா!!
என்று அகத்துள் நீ, அக்ஷர லக்ஷம் அகமுருக மஹாமந்திரத்தை உனக்குள் ஜபித்திட்டால்,
நல்லன அனைத்தும் கிட்டி, நீயும், நல்லவனாகிவிடுவாய், மறவாதே!
இம்மையில் தர்மஸாஸ்தாவின், மஹாமந்திரம், உன்னை பேரின்பத்தில் இருத்திவைக்கும்
ஏ மனமே! சொன்னபடி செய்துவிட்டால்
அறம், பொருள், இன்பம், வீடு அதிசுலபமாய்க் கிட்டிவிடும்,
மறவாதே! மறவாதே!!
ஏ மனமே! பிறர் பழித்தாலும், உன்னைப் போற்றி தூற்றினாலும் அடக்கமுடன் கடமையைச் செய்திடுவாய்
உனது பகைவனுக்குள் ஐயப்பன், உனதாத்மாவாயிருக்கின்றான் மறந்திடாதே! ஜாக்கிரதை!
எதையும் எதிர்பார்த்து, சத்யஸ்வரூபனான ஐயன், ஐயப்ப ஸ்வாமிக்கு உறுதியாகத் தொண்டினைச் செய்திடுவாய்
நியாயத்துடன் கடமைகளை, ஒழுக்கத்துடன் நீயும், நிராசையுடன் உறுதியாகச் செய்திடுவாய், மறவாதே!
ஏ மனமே! சுயநலத்தை முன்னிட்டு சொப்பனத்திலும், பொய் சொல்லிடாதே என்று உபதேசித்த, ஐயனை நம்பிடுவாய்
ஆசையுள்ளவன் கூடவே, அறியாமையிருந்து வருமென்ற ஐயப்பன் உபதேசத்தை மறந்திடாதே.
தரித்திரத்துடன், துக்கத்தை, மஹாபயத்தைத் துடைத்து ரக்ஷிக்கும் தர்மஸாஸ்தாவை நம்பிடுவாய்.
ஆசையற்றவனிடம், பொறாமை, பேராசை, பொய், சூது, காமக்ரோதம் அணுவளவும் இராது மறந்திடாதே!
ஏ மனமே! தன்னை மறந்தவனே அஞ்ஞானி, தன்னைத்தான் ஐயப்பனென்று உணர்ந்தவனே ஞானியுமாவானடா, மறந்திடாதே!
உனதுள்ளத்தின் மிகக்கொடிய மாசுகள், பேராசையாகுமென்ற மணிகண்ட ஸ்வாமியின் உபதேசத்தை நம்பிடடா!
உனதுமனம் சலனமற்று ஒருமையுடன் இருந்துவர உனக்குள் ஐயன் ஐயப்பனை உறுதியாக இருத்திடுவாய்
பற்றுள்ளவரை, உன்னைக் கொடிய துன்பமும், துக்கமும் துரத்திவந்து பற்றிக்கொள்ளும் மறந்திடாதே!
நாமரூபத்துடனிருக்கும் உனதுடலுக்குப் பிறப்பும் இறப்பும் உண்டு மறவாதே!
உனக்குள்ளிருக்கும் உயிருக்கும், அறிவுக்கும், ஆத்மாவிற்கும் அழிவில்லை என்பதை நீ மறந்திடாதே!
ஆசையுள்ளவனிடம் அறியாமை என்கிற ஆணவ மலம் நிறைந்திருக்கும், மறவாதே! மறவாதே!
விருப்புடன், வெறுப்பும் காமக்ரோதம், பொய், பொறாமை, எல்லாம் ஆசையின் வேலையாகும் மறந்திடாதே!
உலகத்தினுள் உறுதியான நினைப்பின்படி உனக்கு மறுபிறவி கிட்டிவிடும் மறந்திடாதே! நம்பிடுவாய்
உனது உயிருக்குயிரான ஐயனை அகத்துள் உறுதியாக இருத்தி நினைத்துவந்தால் நீயும் ஜீவன்முக்தனாகிவிடுவாய்
உலகில் அசைந்தும் அசையாமலிருப்பதெல்லாம் ஐயன் ஐயப்ப ஸ்வாமியென்று உறுதியுடன் நீ நம்பிடுவாய், மறவாதே!
பகலிரவில் பிறருடன் பகைத்துக் கொண்டிடாதே! பாரெல்லாம் நிறைந்திருப்பவன் ஐயப்ப ஸ்வாமியாகும் நம்பிடுவாய்.
ஐயப்பன் கவசபலன், ஐயத்தைப் போக்கி உன்னை அருள்மயமாக்கிவிடும்
ஐயப்பன் கவசஸாரம், அகத்துள் அறியாமையை அறவே எரித்துவிடும்
ஐயப்பன் கவச பாராயணம், பாரினைப் பொய்யாக்கி உன்னை பரஞ்ஜோதிமயமாக்கிவிடும்
ஐயப்பன் கவசமிதை பொருளுணர்ந்து ஏத்திட்டால், ஐயனை அகத்துள் ‘நான்’ என்றுணர்வாய் நீ!
அனைவரின் அகத்துள்ளே, அறிவு மயமாயிருந்துவரும் சபரிமலை, தர்ம ஸாஸ்தாவிற்கு ஜெயமங்களம்
அனைவரின் அகத்துள்ளே, அன்பு மயமாயிருந்துவரும் ஐயன் ஐயப்ப ஸ்வாமிக்கு நித்ய ஸுபமங்களம்
அனைவரின் அகத்துள்ளே, உயிருக்குயிராயிருந்துவரும் ஹரிஹரசுதனுக்கு ஜெயமங்களம்
அனைவரின் அகத்துள்ளே, அழிவற்ற ஆத்மாவாயிருந்துவரும் காந்தமலை, ஜோதிக்கு நித்ய ஸுபமங்களம்
சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தைக் காத்து ரக்ஷிக்கும் ஐயன் ஐயப்ப ஸ்வாமிக்கு ஜெயமங்களம்
நாமக்கல் வட்டம், சேந்தமங்கலம், ஸ்ரீ தத்தகிரி முருகனுடனிருக்கும் ஐயப்ப ஸ்வாமிக்கு நித்ய ஸுபமங்களம்
புதுக்கோட்டை அதிஷ்டானம் ஸ்ரீ புவனேஸ்வரி மகனான, மணிகண்ட ஸ்வாமிக்கு ஜெயமங்களம்
சேலம் ஸ்கந்தகிரி மலையிலே, ஸ்கந்தஜோதி மயமான முருகனின் தம்பிக்கு நித்ய ஸுபமங்களம்
கலியுகத்தெய்வமான காந்தமலை ஜோதிஸ்வரூபனான ஹரிஹரசுதனுக்கு ஜெயமங்களம்
துன்புருகின்றவர்களின் துயரத்தைத் துடைத்து ஊழ்வினையை வேரறுக்கும் ஐயப்ப ஸ்வாமிக்கு நித்ய ஸுபமங்களம்
நாமரூபமற்ற மெய்ப்பொருள்மயமான பரம்பொருளாயிருந்துவரும் ஐயப்பனுக்கு ஜெயமங்களம்
உருவமும் அருவமுமற்ற தானும் நானுமற்றிருந்துவரும் ஹரிஹரனின் நிஜஸ்வரூபமான ஐயப்ப ஸ்வாமிக்கு நித்ய ஸுபமங்களம்
அணுவிற்கணுவானவனும் மஹத்திற்கெல்லாம் மஹத்தானவனுமான ஐயனுக்கு ஜயமங்களம்
ப்ரணவ மஹாவாக்கியத்தின் மெய்ப்பொருள் மயமான ஹரிஹரசுதன் ஐயப்ப ஸ்வாமிக்கு நித்ய ஸுபமங்களம்
சரணாகதப் ப்ரியனான ஸத்குரு ஐயன் ஐயப்ப ஸ்வாமிக்கு ஜயமங்களம்
ஆண்பெண்களுள்ளத்தில் ஆன்மாவாயிருந்து வரும் சபரிமலை தர்மஸாஸ்தாவிற்கு நித்ய ஸுபமங்களம்
என்றென்றும், எனக்குப் பாதுகாப்பாக எனக்குள்ளிருந்து வரும் எங்கள் மணிகண்ட ஸ்வாமிக்கு ஜயமங்களம்
சபரிமலை மேலிருக்கும் ஞானமே உருவமான ஞானபண்டித தர்மஸாஸ்தாவிற்கு நித்ய ஸுபமங்களம்
உலகில் ஆசையின்றி வாழ்வதுடன், அறிவுடைமை என்று அறுதியிட்டுரைத்த ஐயப்ப ஸ்வாமிக்கு ஜயமங்களம்
சச்சிதானந்த ஸ்வரூபா ஸர்வ ஜகத் ஸாக்ஷியான சேலம் ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் இருக்கும் ஸத்குரு நாதனுக்கு நித்ய ஸுபமங்களம்
ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஸ்வாமியே ஐ சரணம் ஐயப்பா
ஓம் தத் ஸத்